Published Date: April 20, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 32 வழிதடங்களில் புதிய பஸ்களை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
32 புதிய பஸ்கள்:
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டத்தில் மகளிர் விடியல் பயணம் மேற்கொள்ள ஏதுவாக 32 வழித்தடங்களில் புதிய நகர பஸ்களை அமைச்சர்கள் சிவசங்கர், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும் பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். இதில் ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன், வெங்கடேசன், எம்.எல்.ஏ, அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
19 விருதுகள்:
நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசும் போது இந்தியாவில் சிறந்த போக்குவரத்து கழகம் என்ற ஒரு பட்டியலை தயாரித்து அதற்கான விருதுகளை வழங்குகின்ற நிகழ்ச்சி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. அப்படி வழங்கிய நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருக்கின்ற நம்முடைய அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 19 விருதுகளை பெற்றிருக்கின்றோம். இந்த விருது வழங்கும் விழாவில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தமிழ்நாட்டை போல் எல்லா மாநிலங்களும் போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என பேசியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் பஸ்களை புதிதாக விட இந்த ஒரு நல்ல சூழல் ஏற்பட்டிருக்கிறது.
மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே 634 பஸ்கள் இயக்கப்பட்டு இந்த புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. ஜூன் மாதம் மின்சார பஸ் திட்டத்தை முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்கிறார். ஆகஸ்ட் மாதம் முதல் அந்த பஸ்கள் மதுரையில் செயல்பாட்டிற்கு வரும் என்றார்.
Media: DAILYTHANTHI